நெல்லையில் சர்வதேச அளவிலான மாஸ்டர் கப் வேக சதுரங்க போட்டிகள்
நெல்லை:
நெல்லை மாஸ்டர் செஸ் கிளப் சார்பில், முதலாவது மாஸ்டர் கப் சர்வதேச வேக சதுரங்க (Rapid Chess) போட்டிகள் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்தப் போட்டிகளில் ஆறு வயது முதல் 73 வயது வரை உள்ள வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சதுரங்க வீரர்கள் கலந்து கொண்டனர்.
ரேபிட் ஃபைட் ரேட்டிங் முறையில் ஒன்பது பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டிகளில், ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறுபவர்கள் அடுத்தடுத்த கட்டத்துக்கு தகுதி பெற்று இறுதி சுற்றில் மோதினர்.
போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கு மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்பிலான ரொக்க பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, 6 வயது முதல் 16 வயது வரையிலான பிரிவுகளில் வெற்றி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. மற்ற பிரிவுகளில் விளையாடிய மூத்த வீரர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.
நெல்லை மாவட்டத்தில் இவ்வாறான சர்வதேச தரம் வாய்ந்த சதுரங்க போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.