தூத்துக்குடியில் ஆறாவது புத்தகத் திருவிழா – கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறப்பு போட்டிகள்!
தூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா செயலாக்கக் குழுவும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் இணைந்து நடத்தும் “ஆறாவது புத்தகத் திருவிழா 2025” வரும் ஆகஸ்ட் 22 முதல் 31 வரை 10 நாட்கள் தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இரண்டு நிமிட பேச்சுப் போட்டி, நூல் அறிமுகப் போட்டி, இலக்கிய வினாடி வினா, விவாதம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகள், இணை இயக்குநர் (கல்லூரி கல்வித் துறை) மூலமாக ஒழுங்குபடுத்தப்படுகின்றன. ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனி தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மாவட்ட மற்றும் வட்டார அளவிலான போட்டிகளில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறுவோருக்கு பரிசுக் கூப்பன்கள் வழங்கப்படுகின்றன. இந்த கூப்பன்கள் மூலம் மாணவர்கள் புத்தகக் கண்காட்சியில் 20% தள்ளுபடியில் விரும்பிய புத்தகங்களை வாங்கலாம்.
மாணவர்களுடன், கல்லூரி ஆசிரியர்களுக்கான புத்தக மதிப்பாய்வு உள்ளிட்ட போட்டிகளும் நடைபெறுகின்றன. ஆசிரியர்களுக்கும் முதல் மூன்று பரிசுகளுடன் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. க. இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள், மாணவர்களும் ஆசிரியர்களும் உற்சாகமாக கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், பொதுமக்களும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.