ராதாபுரம் கொலை வழக்கு – “தம்பியை 2 முறை கொல்ல முயன்றனர்” – அண்ணன் கண்ணீர் பேட்டி
நெல்லை, ஆக. 9:
ராதாபுரம் அருகே சாலை விபத்து என சித்தரிக்கப்பட்ட கொலை வழக்கில் உயிரிழந்த பிரபுதாஸ் (28) என்பவரின் உடலை, அவரது உறவினர்கள் இன்று பெற்றுக்கொண்டனர்.ஆக. 6ம் தேதி நக்கனேரி–கோலியான்குளம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பிரபுதாஸ் மற்றும் தமிழரசன் (19) காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பிரபுதாஸ் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனையில் ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.இந்தக் கொலை தொடர்பாக வினோத், லிங்கசாமி, மகராஜன் மற்றும் அருண் குமார் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பழிவாங்கும் நோக்கில் கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இது குறித்து பிரபுதாஸின் அண்ணன் கருணைதாஸ், “இது முன்பே இரண்டு முறை என் தம்பியை கொல்ல முயற்சி நடந்தது. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மர்ம நபர்கள் வந்த காரை போலீசார் விசாரித்தும், கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று உடலைப் பெற்றுக்கொள்கிறோம்,” என கண்ணீர் மல்கக் கூறினார். தற்போது தலைமறைவாக உள்ள மற்றொரு நபரையும் விரைவில் கைது செய்வோம் என காவல்துறை தெரிவித்துள்ளது.