பாலர் ஞாயிறு: திருநெல்வேலியில் சிறப்பு குழந்தைகள் பவனி
திருநெல்வேலி, ஆக. 10 –
பாலர் ஞாயிறு பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலியில் தேவாலயங்கள் சார்பில் குழந்தைகளின் சிறப்பு பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தென்னிந்திய திருச்சபை (CSI) திருநெல்வேலி திருமண்டலத்தின் கீழ் பல்வேறு தேவாலயங்களில் பாலர் ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மேலப்பாளையம் அருகே உள்ள சேவியர்காலனி தூய பேதுரு ஆலயம் சார்பில் நடைபெற்ற பேரணிக்கு சேகர குரு காந்தையா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். சபை ஊழியர் பி. கிறிஸ்டோபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காமராஜர் சாலை, அந்தோனியார் ஆலய சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி, பின்னர் தேவாலயத்தை அடைந்தது.
உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் குழந்தைகள் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் சிறந்து விளங்கவும், தமிழகத்தில் மழைவளம் பெருகவும், சமாதானம் மற்றும் சமத்துவம் நிலவவும் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. மேலும், மழலைகள் ஒன்றாக இணைந்து ஜெபம் செய்தனர்.
விழா நிறைவாக ஞாயிறு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.