நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய யானை குறித்த வதந்தி – நிர்வாகம் விளக்கம்
திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் கோவிலில் பக்தர்கள் மத்தியில் பெரும் பாசத்தைப் பெற்ற “காந்திமதி” என்ற யானை, வயது முதிர்வின் காரணமாக சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தது. கோவிலின் திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளில் அயராது பங்கேற்று வந்த அந்த யானை மறைவால், பக்தர்கள் அனைவரும் ஆழ்ந்த வருத்தத்தில் மூழ்கினர்.
இதையடுத்து, கோவிலுக்கு புதிய யானை ஒன்றை வழங்கும் நோக்கில், ஒரு உபயதாரர் முன்வந்துள்ளார். தமிழக அரசு, அறநிலையத் துறை ஆகியவற்றின் உதவியுடன், நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய யானை வாங்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அந்த யானை கோவிலுக்கு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இணையம் மற்றும் வாட்ஸ்அப்பில் ஒரு யானைக் குட்டியின் படம் பரவியதுடன், “இதுவே நெல்லையப்பர் கோவிலுக்கு வரவிருக்கும் புதிய யானை” எனும் தகவலும் வைரலாகி வருகிறது. ஆனால், இந்த தகவல் உண்மையல்ல என்று கோவில் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. தற்போது பரவி வரும் புகைப்படம், கோவிலுக்கு வாங்கப்படும் யானையுடன் எந்தத் தொடர்பும் இல்லையெனவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் வரை இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.