திருநெல்வேலியில் நாளை தொடங்கும் பிஎன்ஐ கண்காட்சி
திருநெல்வேலி, செப்டம்பர் 25 – திருநெல்வேலி பிஸினஸ் நெட்வொர்க் இன்டர்நேஷனல் (BNI) அமைப்பு, நாளை (செப்டம்பர் 26) முதல் மூன்று நாள் மிகப்பெரிய கண்காட்சியை நடத்த உள்ளது. இக்கண்காட்சி, உள்ளூர் தொழில் முனைவோர்களின் தயாரிப்புகள், சேவைகள் மற்றும் வணிக வாய்ப்புகளை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
செப்டம்பர் 26 முதல் 28 வரை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், 120-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன. கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம், உணவு பொருட்கள், உடைத் தொழில், நிலம்-வீடு தொடர்பான சேவைகள் உள்ளிட்ட பல துறைகள் இதில் இடம்பெறுகின்றன.
பத்திரிகையாளர் சந்திப்பில் பிஎன்ஐ நிர்வாகிகள், இந்தக் கண்காட்சி தொழில் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், புதிய தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கும் சிறந்த வாய்ப்பாக அமையும் என தெரிவித்தனர்.
மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை பொதுமக்களுக்கு திறந்துவைக்கப்படும். மேலும், பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.
திருநெல்வேலி மக்களை, புதிய வணிக முயற்சிகளை காணவும், உள்ளூர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும் அனைவரும் இக்கண்காட்சியில் பங்கேற்க பிஎன்ஐ நிர்வாகிகள் அழைத்துள்ளனர்.