தேசிய அளவில் “ஆன்மீக பார்வையில் திருக்குறள்” புத்தக வெளியீட்டு விழா
குறள் ஓசை – 1
“ஆன்மீக பார்வையில் திருக்குறள்” என்ற புத்தக வெளியீட்டு விழா, 2025 அக்டோபர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, ஸ்ரீ ஐயப்பன் திருமண மண்டபம், வண்ணார்பேட்டை, திருநெல்வேலியில் நடைபெற்றது.
இந்த “ஆன்மீக பார்வையில் திருக்குறள்” என்ற தொடர் வரிசை புத்தகம், திரு. தேவாசீர் இ. லாறி அவர்களின் கருத்தாக்கத்தில் உருவானது. இப்புத்தகத்தின் நோக்கம் — இளைய சமுதாயத்தினருக்கு எளிமையாக, ஆன்மீகக் கண்ணோட்டத்தில் திருக்குறளை விளக்குவதாகும். இதில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அருளுரை இணைக்கப்பட்டுள்ளதால், புத்தகம் இன்றைய தலைமுறையிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த வெளியீட்டு விழாவிற்கு மூத்த வழக்கறிஞர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் தலைமை வகித்தார். மகா சோமாஸ் கந்தமூர்த்தி அவர்கள் புத்தக மதிப்புரையாற்றினார். புத்தகத்தை வழக்கறிஞர் சிவபத்மநாபன் அவர்கள் வெளியிட, வழக்கறிஞர் இராமநாதன் மற்றும் லயன்ஸ் கிளப் துணை ஆளுநர் ஜான் சுபாஷ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
மகா சோமாஸ் கந்தமூர்த்தி அவர்கள் உரையாற்றியபோது:
> “கடவுள் வாழ்த்து, நீர் மேலாண்மையின் முக்கியத்துவம், சான்றோர் பெருமை, இறைவனின் நீதியை வலியுறுத்தல் மற்றும் அன்புடைமை — இவை அனைத்தையும் திருக்குறள் ஆன்மீகப் பார்வையில் வெளிப்படுத்துகிறது. இறைவனிடம் அன்பு செலுத்துவது மட்டுமல்லாமல், அவர் படைத்த சகல உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்ற அவசியத்தை இப்புத்தகம் அழகாக உணர்த்துகிறது. இதைப் படித்து அனைவரும் பயன் பெற வாழ்த்துக்கள்,” என்றார்.
மூத்த வழக்கறிஞர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் பேசும்போது:
> “உலகப் பொதுமறையான திருக்குறள், தமிழின் அபூர்வமான பொக்கிஷமாகும். இந்த அருட்பெருஞ்செல்வத்தை பள்ளி மாணவர்கள் படித்து, அதன் கருத்துக்களை தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இப்புத்தகத்தின் முக்கிய நோக்கம்,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
> “மொழி, மதம், தேச எல்லைகளை தாண்டி, உலகம் முழுவதும் மதிப்பிற்குரிய நூலாக விளங்குவது திருக்குறள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.”
மூத்த வழக்கறிஞர் சிவபத்மநாபன் அவர்கள் உரையாற்றியபோது:
> “மதச்சார்பில்லாமல் வாழ விரும்பும் மனிதர்களுக்கான ஒரு வேதநூல் திருக்குறள் ஆகும். மற்ற அனைத்து நூல்களும் சமயம் சார்ந்தவை; ஆனால் திருக்குறள் மனித வாழ்க்கைக்கான வழிகாட்டியாக திகழ்கிறது,” என்றார்.
அவர் மேலும் குறிப்பிட்டது:
> “உலகத்தில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, முதலிடம் பெற்ற மதச்சார்பில்லாத ஒரே நூல் திருக்குறள் ஆகும். இதுவரை 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது,” என்றார்.
விழா ஏற்பாடுகளை மனுஜோதி ஆசிரமம் நிர்வாகிகள் டி. பால் உப்பாஸ், என். லாறி, டி. லியோ பால் சி. லாறி மற்றும் தேவ இந்திரன் ஆகியோர் சிறப்பாக மேற்கொண்டனர்.