நெல்லை மாநகரில் வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம்
நெல்லை மாநகர பகுதிக்குள் கனரக வாகனங்கள் (லாரிகள்) வருவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததை எதிர்த்து, இன்று (செவ்வாய்) நெல்லை டவுன் பகுதியில் வியாபாரிகள் கடைகள் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் நெல்லை வியாபாரிகள் சங்கம், பூதத்தார் முக்கு வியாபாரிகள் சங்கம், காய்கறி வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து, 300க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
பின்னணி
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பழையபேட்டை பகுதியில் லாரி முனையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து சிறிய வாகனங்கள் மூலம் பொருட்களை விநியோகிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதனை அமல்படுத்தும் வகையில், மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால், இதற்கு பல வியாபாரிகள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாவட்ட நிர்வாகம் பழைய முறையிலேயே லாரிகளை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
ஆதரவு – எதிர்ப்பு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, நெல்லை இந்து வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அவர்களுக்கு உட்பட்ட கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், நெல்லை டவுன் மார்க்கெட் முழுவதும் கடைகள் மூடப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது. வியாபாரிகள் சங்கத்தின் தகவலின்படி, போராட்டம் நாளை காலை 6 மணி வரை தொடரும் என கூறப்பட்டுள்ளது.