நெல்லை, ஆக.9- வள்ளியூர் அருகே திருநங்கையின் குடிசை வீட்டிற்கு மர்ம நபர்கள் தீவைத்தில் குடிசை வீடு தீக்கிரையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வள்ளியூர் அருகே சூட்டுப்பத்தை கிராமத்திற்கு தென் பகுதியில் 36 திருநங்கையருக்கு அரசு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொருவருக்கும் தலா 2 சென்ட் நிலம் 2021ல் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சமீபத்தில் அந்த நிலம் மெய்க்கால் புறம்போக்கு நிலம் எனக் கூறி திருநங்கைகளுக்கு வேறு இடம் தரப்படும் என வருவாய்த் துறையினர் என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு திருநங்கையர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் 300 சதுர அடியில் திருநங்கைகளுக்கு சொந்தமான குடிசை வீடு ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் அந்த பகுதியில் இருந்து திருநங்கையர்கள் வெளியே சென்று விட்டு மீண்டும் இரவு 10 மணியளவில் வீடு திரும்பிய போது அந்த குடிசை வீடு தீயில் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த திருநங்கையர்கள் நேற்று காலை வள்ளியூர் காவல் நிலையத்தில் திரண்டனர். > இதுதொடர்பாக திருநங்கை தாமரை (32) என்பவர் அளித்த புகாரில், ‘தாங்கள் வீட்டில் இல்லாத போதும் மர்ம நபர்கள் வீட்டுக்கு தீ வைத்து எரித்து விட்டனர். இதனால் குடிசை வீட்டில் இருந்த ஒயர் கட்டில், உடமைகள் உட்பட ரூ.35 ஆயிரம் பணமும் தீக்கிரையாகி விட்டது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்தார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த வள்ளியூர் போலீசார் மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வள்ளியூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
