பீகார் தேர்தலில் சீர்திருத்தம் என்ற பெயரில் 69 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: மேலப்பாளையத்தில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்
தேர்தல் சீர்திருத்தம் என்ற பெயரில், பிஹார் மாநிலத்தில் 69 லட்சம் வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலிலிருந்து நீக்கிய இந்திய தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) சார்பில் மேலப்பாளையத்தில் இன்று (ஆக. 8) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாடு தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக, மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மேலப்பாளையம் நகரச் செயலாளர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். சிபிஎம் செயற்குழு உறுப்பினர் மோகன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினார்.
அவர் பேசும்போது, “தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை ஜனநாயக விரோதமானது. ஒரு சமூகத்தினரை குறிவைத்து அவர்களது வாக்குரிமையைப் பறிக்கும் முயற்சியாகவே இதைப் பார்க்கிறோம். சிறப்புத் திருத்தம் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும்” என்றார்.
பிஹாரில் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணியை தேர்தல் ஆணையம் அண்மையில் மேற்கொண்டது. இதில், சுமார் 69 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் உரிய காரணமின்றி நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் போக, லட்சக்கணக்கானோரின் பெயர்கள் முறையான அறிவிப்பின்றி நீக்கப்பட்டதாக சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சுடலைராஜ், மாரிச்செல்வம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் முருகன், மதுபால், பாலு, இசக்கிமுத்து உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, தேர்தல் ஆணையத்துக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
நிறைவாக, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பாஸ்கரன் நிறைவுரையாற்றினார். அவர் பேசும்போது, “மத்திய பாஜக அரசின் கைப்பாவையாகத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் இந்த சர்வாதிகாரப் போக்கை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.