ஐ.நா சபை பாராட்டும் வகையில் தமிழகத்தில் சுகாதாரத் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் மருத்துவ படிப்பு முடித்து மருத்துவராக செல்லும் நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வு, சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டு என நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி 55 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியின் 55 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 2019 முதல் 2025 வரை படித்த 250 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். இதனைத் தொடர்ந்து விழா பேருரை ஆற்றிய சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு
சென்னை மதுரைக்கு அதற்கு அடுத்தபடியாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அதிக புற நோயாளிகள் வரும் மருத்துவமனையாக உள்ளது. நாளொன்றுக்கு 5000 பேர் வெளி நோயாளிகளாக வருகின்றனர். ஏற்கனவே மருத்துவமனையில் 3000 பேர் உள்நோயாளிகளாக இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் பரிசோதனை செய்வதற்கு ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் எந்திரம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது இதற்கு முன்பாக புற்றுநோய் பரிசோதனை சிகிச்சைக்கு திருவனந்தபுரம் வரை செல்லும் நிலை, பல லட்சம் ரூபாய் செலவாகும் நிலை இருந்து வந்தது இதன் மூலம் தற்போது அந்த நிலை மாறி உள்ளது, மேலும் ஒரு காலத்தில் ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள் மருத்துவப் படிப்பிற்கு செல்ல முடியாத திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கு நடத்தி வெற்றி பெற்றதன் விளைவாக ஆண்டுக்கு 4022 பேர் மருத்துவ படிப்பிற்கும் 1000 பேர் பல் மருத்துவ படிப்பிலும் சேர்ந்து வருகின்றனர். தமிழக அரசு செயல்படுத்தும் திட்டமான இல்லம் தேடி மருத்துவம், உடல் உறுப்பு தானம் ஆகிய செயல்பாடுகளுக்கு ஐ.நாவே பாராட்டி விருது வழங்கியுள்ளது. அந்த அளவிற்கு தமிழகத்தில் சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது . மருத்துவ படிப்பு முடிந்து மருத்துவர்கள் ஆக வெளியில் செல்லும் நீங்கள் அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுகுமார், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் , மேயர் ராமகிருஷ்ணன் , துணை மேயர் ராஜூ, மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் மருத்துவர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
