தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஆறாவது புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 22 முதல் 31 வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா செயலாக்கக் குழுவும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் இணைந்து நடத்தும் இவ்விழாவில் பள்ளி மாணவர்களுக்காக பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, கவிதைப் போட்டி, வினாடி வினா, திருக்குறள் (ஒப்புவித்தல் மற்றும் வினாடி வினா), மாறுவேடப் போட்டி, சிறுகதை எழுதுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் வகுப்பு வாரியாக (5ம், 6-8ம், 9-10ம், 11-12ம்) நடைபெறும். வட்டார மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டு, அதன் மூலம் புத்தகங்களை வாங்கும் வாய்ப்பு வழங்கப்படும். பள்ளிச்சீருடையுடன் பங்கேற்கும் மாணவர்களுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படும். மேலும், உண்டியல் திட்டம் மூலம் அதிக தொகை சேகரித்து புத்தகம் வாங்கும் பள்ளிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். ஆசிரியர்களுக்காக புத்தக மதிப்பாய்வு, என்னை செதுக்கிய புத்தகம், நான் படித்த சிறந்த புத்தகம் போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பள்ளி நூலகப் போட்டிகளில் (தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை) சிறந்த நூலகங்கள் மற்றும் அதிக உறுப்பினர் சேர்க்கை கொண்ட பள்ளிகள் பாராட்டப்படுவார்கள். “Book Fair Wall” போட்டியும் நடைபெறும். மாணவர்கள் தங்களது உறவினர்களுக்கு புத்தகத் திருவிழா பற்றிய தபால் அட்டைகள் அனுப்பும் போட்டியில் அதிக அளவில் அனுப்பும் பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.